August 3, 2016 தண்டோரா குழு
பொதுவாகக் கல்லூரி மாணவர்கள் என்றாலே காரிலும், மோட்டார் சைக்கிளிலும் வேகமாகச் செல்வோர் என்ற அபிப்ராயம் நம்மில் பலருக்கு உண்டு. இதற்குக் காரணம் ஒரு சில இளைஞர்கள் வாகனம் ஓட்டும் வேகத்தைப் பார்த்தாலே கிலி ஏற்படும். இவர்கள் சாலைகளில் செல்கிறார்களா அல்லது பந்தய மைதானத்தில் பறக்கிறார்களா என்று நினைத்துக் கொள்வது பலருக்கு வழக்கமாக இருக்கிறது.
இந்திய தேசத்தின் வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் பச்சிம் மேதினிபூர் மாவட்டத்தில் முக்கியமான தொழில்துறை நகரமான காரக்பூரை சேர்ந்த ஐஐடி மாணவர்கள் ரேஸ் காரை ஒன்றை வடிவமைத்து புதிய சாதனைப் படைத்துள்ளனர். இவர்கள் வடிவமைத்துள்ள இந்த கார் ரஷ்ய நாட்டில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளது என்னும் விஷயம் நமது தேசத்திற்கு பெருமையாகவே இருக்கிறது.
மேலும், இந்த ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய இந்த கார் பார்முலா 1 பந்தயக்காராகும். இதற்கு முன் இது போன்று சுமார் 3 கார்களை இந்த மையத்தின் மாணவர்கள் தயாரித்துள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். அவர்கள் தற்போது வடிவமைத்த இந்தக் காருக்கு கே-3 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் ரஷியாவில் நடைபெற உள்ள போட்டியில் இவர்கள் உருவாக்கியுள்ள இந்த காரும் இடம் பெற உள்ளது. இந்தப் போட்டியில் உலகெங்கிலும் இருந்து சுமார் 800 மாணவர்கள் 30 அணிகளாக தங்களது தயாரிப்புகளைக் காட்சிக்கு வைக்க உள்ளனர்.
இந்த கே-3 காரின் எடை சுமார் 220 கிலோவாகும் எரிபொருள் சிக்கனமானது கூட. இதற்கு முன்பு தயார் செய்த கார் லிட்டருக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மட்டுமே ஓடியது. ஆனால் இந்த கார் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் ஓடக் கூடியது. மேலும், இந்தக் கார் ஆகஸ்ட் மாதம் முழுமை பெறும் என்று மாணவர்கள் குழுவின் தலைவர் கேதன் முந்த்ரா தெரிவித்துள்ளார்.
ஐஐடி காரக்பூர் கல்வி மையத்தில் டீம்கார்ட் என்ற தனிப் பிரிவு இயந்திர பொறியியல் துறையின் கீழ் வருகிறது. இப்பிரிவின் மாணவர்கள் வடிவமைத்துள்ள கார்கள் மூன்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
காரின் எடையைக் குறைப்பதற்காக அலுமினியம் அலாய் பாகங்களை சேஸிஸில் பயன்படுத்தியுள்ளனர். மேலும், காரின் மேல் பகுதி முழுவதும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதனால் காரின் எடை பெருமளவு குறைந்துள்ளது.
ஃபார்முலா ஸ்டூடண்ட் ரஷியா 2016 போட்டி செப்டம்பர் 8ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. காரக்பூர் மாணவர்கள் காரில் பறப்பது மட்டுமல்ல, காரை வடிவமைக்கவும் தங்களால் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.