August 11, 2016 தண்டோரா குழு
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பெத்லகேம் பகுதியில் 396 மாணவ மாணவிகளுடன் செயல்பட்டு வரும் நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் 12 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் தற்போது அங்கு வெறும் 7 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
அதிலும் இவர்களில் யாராவது விடுப்பில் செல்லும் நேரங்களில் பள்ளி மாணவர்களைக் கவனித்து கொள்ளக்கூட ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையும், இதர அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறிய அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு செல்ல அனுமதிக்காமல், பள்ளிக்குப் பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்குப் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெற்றோரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது.
இது குறித்து அங்குப் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து தனியார் பள்ளியின் மீதான மோகம் அதிகரிக்க இது போன்ற தவறுகள் தான் காரணமாக அமைவதாகத் தெரிவிக்கின்றனர்.