December 2, 2016 தண்டோரா குழு
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பால் நமது வர்த்தக சமுதாயம், தொழில்நுட்பத்திற்கு மாறி பல வளர்ச்சியை பெற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில், 21ம் நூற்றாண்டில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமில்லை. ஊழல், இந்தியாவின் வளர்ச்சியைக் குறைத்து விடுகிறது. இது, நடுத்தர, ஏழை மக்களின் கனவுகளைத் தகர்த்து விடுகிறது. அதிக பண மதிப்பு கொண்ட நோட்டுகளே, ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு முக்கிய பங்காக உள்ளன.
இந்த நேரத்தில் மக்கள் அனைவரும், மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, ரொக்கமில்லாப் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இது ஊழல் மற்றும் கறுப்புப் பணம் இல்லாத இந்தியாவை உருவாக்க அடித்தளமிடும்.
இணையதளம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தி அலைபேசி மூலம் உணவு வாங்குவது, பொருட்களை வாங்ககுவது, விற்பது, கால் டாக்சியை அழைப்பது என அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்.
நமக்கு தேவையான வசதிகளை வேகமும் தொழில்நுட்பமும் கொண்டு வந்துள்ளன. பெரும்பாலானோர், கிரடிட் கார்டுகள் பயன்படுத்துவீர்கள் எனக் கருதுகிறேன். இருப்பினும், ரொக்கமில்லாப் பரிமாற்றத்திற்கு அதிக அளவில் வசதிகள் உள்ளதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
ரூபாய் நோட்டு வாபஸ், சிறிய வர்த்தகர்களுக்கு, பொருளாதார மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நமது வர்த்தக சமுதாயம், தொழில்நுட்பத்திற்கு மாறி பல வளர்ச்சியைப் பெற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பற்றி அறிவித்த போது, மக்களுக்குச் சில சிரமங்கள் ஏற்படும் எனத் தெரியும். நீண்ட கால வளர்ச்சிக்காக, சிறிய காலம் ஏற்படும் இந்த சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன்.
அதனை ஏற்று இந்தியாவின் நீண்ட கால வளர்ச்சிக்காக, மக்கள் தற்காலிக சிரமங்களைச் சகித்து கொள்வதைப் பார்க்கும் செய்தி எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடியின் சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.