May 9, 2016 தண்டோரா குழு
தற்போது, 2016ம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாகனம் மற்றும் அலைபேசி வைத்திருக்கிறோம்.
ஆனால், 100 வருடங்களுக்கு முன்னால் நிலைமை வேறு. அருகில் உள்ள ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட நடந்து தான் செல்ல வேண்டும்.
வசதியுள்ளவர்கள் மாட்டுவண்டியில் பயணம் செய்வர். மேற்கத்திய நாடுகளில், கழுதை மற்றும் குதிரைகள் மீது பயணித்தனர். தகவல் தொடர்பு வெறும் போஸ்ட்கார்ட் என்ற அளவில் மட்டுமே நடைபெற்று வந்தது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், மரைன் பயோலோஜிகல் அசோசியேஷன் (MBA) என்ற அமைப்பைச் சார்ந்த பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஜார்ஜ் பர்கர் பிட்டர், ஒரு போஸ்ட்கார்ட் செய்தியை ஒரு பாட்டிலில் போட்டுத் தண்ணீர் புகாதவாறு அடைத்து மூடி அதைக் கடலில் தூக்கி ஏறிந்து விட்டார்.
சுமார் 1904 க்கும் 1906 க்கும் இடைப்பட்ட காலங்களில் கடலில் வீசப்பட்ட அந்த பாட்டிலில் இருந்த செய்தி இதுதான். “இந்தச் செய்தியை கண்டுபிடித்து கொண்டுபவர்க்கு 1 ஷில்லிங் பரிசு” என்பதே அது. அன்றைய நாட்களில் அந்தத் தொகை சற்று அதிகம் தான்.
அந்தப் பாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் ஜெர்மனி நாட்டின் கடலோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பாட்டில் உள்ளே இருந்த செய்தி மிகவும் பழமை வாய்ந்தது என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் வடக்கு கடலில் உள்ள அம்ரும் என்னும் தீவில் தன்னுடைய விடுமுறை நாட்களை செலவிட்டுக் கொண்டு இருந்த ஓய்வு பெற்ற தபால் அலுவலக தொழிலாளி, மரியான்னே வின்க்ளீர் என்பவர் அதைக் கண்டு எடுத்தார்.
தான் கண்டு எடுத்த இந்த அரியப் பொருளை டேவோன் என்னும் நகரில் உள்ள மரைன் பயோலோஜிகல் அசோசியேஷன் (MBA) அமைப்புக்கு அனுப்பி வைத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அந்த அமைப்பு அவருக்குத் தக்க பரிசுத் தொகை கொடுத்ததோ இல்லையோ, கூடவே அவருக்கு அதிர்ஷ்டமும் காத்திருந்தது.
அது, இந்த அரியச் செய்தியே உலகிலேயே பழமையான செய்தி என்று கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்ததுதான்.
இதன் மூலம் நாம் இரண்டு செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும், ஒன்று அந்த காலத்தில் தகவல் தொடர்பு என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்பதாகும்.
மற்றொன்று, கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவை நூறு ஆண்டுகள் ஆனாலும் கடலில் மிதக்குமே ஒழியக் கரைந்து போகாது. அதனால் அவற்றைக் கடலில் போடுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும்.
இது போல் எத்தனைப் பொருட்கள் கடலில் போடப்பட்டிருக்கும் ஆனால் ஒருசில பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்பதால் மீதமுள்ள பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களுக்குக் கட்டாயம் தீங்கிழைத்திருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. எனவே கடல் பகுதியை அசுத்தப்படுத்தக்கூடாது எனப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.