October 1, 2016 தண்டோரா குழு
உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புக்கு 10 அம்ச பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 17 மற்றும் 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து சென்னையில் காவல் துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் ஆலோசனை நடத்தினார்.
அதில், வாக்குச் சாவடிகளுக்கும், வாக்குச் சீட்டு பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.அமைதியான, சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு காவலர்கள், ஊர்க்காவல் படையினரையும், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், சென்னையிலும் பொது மக்கள் புகார் தருவதற்கான காவல் துறையினரின் தொடர்பு எண்களை வழங்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகளை உறுதியாக நடைமுறைப்படுத்துவதற்கு, பறக்கும் படையுடன் காவல் துறை அலுவலர்கள் உடன் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச பாதுகாப்பு திட்டங்களை அனைத்து காவல் துறை அலுவலர்களுக்கும் தெரிவித்து நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடுமாநிலத் தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தமிழக காவல்துறைக்கு உத்திரவிட்டார்.