November 26, 2016 தண்டோரா குழு
“பணத்தட்டுப்பாடுப் பிரச்சனை தீரும் வரை மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதே சரியான நடைமுறை” என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி எடுத்த நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் ஏழை-நடுத்தர மக்களையே அதிக அளவில் பாதித்து வருவதைக் காண முடிகிறது.
கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் பாதுகாப்பாக உள்ள நிலையில், உழைத்துச் சம்பாதிக்கும் மக்களின் நிலையே நாளுக்கு நாள் அவலத்திற்குள்ளாகி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் ஆகியோரும் பெரும் நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறார்கள்.
மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கும் மாதந்தோறும் ரொக்கமாக வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை இந்த முறை வழங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபோலவே அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுகிற மூத்த குடிமக்கள், அவர்களது குடும்பத்தினர் நிலையும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
தங்களுக்கான ஊதியத்தை ரொக்கமாகத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தில் உள்ள நியாயத்தை மத்திய-மாநில அரசுகள் உணரவேண்டும்.
இந்தியாவில் உள்ள 2 லட்சத்து 20ஆயிரம் ஏ.டி.எம். மையங்களிலும் புதிய ரூ.2000, ரூ.500 ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கான வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
ஏ.டி.எம். மையங்களில் நாளொன்றுக்கு 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையும், வங்கிகளில் வாரத்திற்கு 24ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலையும் அரசுப் பணியில் உள்ளோருக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கிறது. தங்கள் ஊதியப் பணத்தை எடுப்பதற்காக அவர்கள் செலவிடும் நேரம் என்பது பொதுமக்களுக்காக அரசாங்கம் ஆற்ற வேண்டிய பணிகளையும் பாதிக்கக் கூடியதாகும்.
எனவே, அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்குவதே
சரியான நடைமுறை. பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, பொருளாதார முடக்கம் ஆகியவை சரி செய்யப்படும் வரை மத்திய-மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மாத ஊதியத்தையும் அடுத்தடுத்த மாதங்களுக்கான ஊதியத்தையும் ரொக்கமாக வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பேரிடர் கால நடவடிக்கைக்கு இணையாக இதில் மத்திய அரசும் மாநில அரசும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.