August 22, 2016 தண்டோரா குழு
வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகக் கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் மத்திய பிரதேசமும் ஒன்று.அங்குப் பலவேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதோடு, பல மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்தச் சேதங்களை பார்வையிட வந்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தூக்கி வருவது போல் ஒரு போட்டோவும், அவர் சேற்றில் நடக்கும்போது,ஒரு அதிகாரி அவரது காலணியைத் தூக்கிவருவது போலவும் ஒரு போட்டோவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை டிவிட்டரில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.அவர் வெள்ளச் சேதத்தை பார்வையிடச் சென்றாரா அல்லது அவர் வெள்ளச் சேதத்தில் இருந்து தப்பித்துச் சென்றாரா எனப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் முதல்வர் அடுத்து வரவுள்ள 2020ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களைத் தயார் செய்கிறார் எனவும்,இதுபோன்ற ஒரு நிகழ்வு இந்தியாவில் மட்டும்தான் நடக்கும், ஏனெனில் இங்குதான் அமைச்சர்களும் முதல்வர்களும் அசாத்திய அதிகாரம் கொண்டவர்கள் எனவும் கிண்டலடித்துள்ளனர்.
ஆனால் இது குறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர்,முதல்வர் வெள்ளம் பாதித்தப் பகுதியில் நடக்கும்போது ஏதோ ஒரு பொருள் கால்மீது மோதியுள்ளது.இதனால் அவரால் நடக்க முடியவில்லை. ஆனாலும் அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டே ஆகவேண்டும் என்பதால் அவரது காவலர்கள் அவரைத் தூக்கிச்சென்றனர்.
அதற்கு முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை ஆனாலும் அவரது பாதுகாப்பு கருதி அவரை அவர்கள் தூக்கிச்சென்றனர் எனக் கூறினார்.ஆனாலும் அவரது இந்த கை மீது அமர்ந்து செய்த பயணம் இன்னமும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.