August 3, 2016 தண்டோரா குழு
கல்வி கற்க மதராசாவிற்குச் செல்ல மறுத்த தனது மூன்று குழந்தைகளை ஆசிரியரின் உதவியோடு சங்கிலியால் கால்களைப் பிணைத்து தண்டனை அளித்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த சிரஜ் வஹப்.
7 முதல் 10 வயதுக்குட்பட்ட தனது மூன்று மகன்களைப் பற்றி பெரிய கனவுகளை வைத்துள்ளவர். இந்நிலையில் தான் மதராசுக்குச் செல்ல மறுத்த தன் மைந்தர்களை வழிக்குக் கொண்டுவர ஒரு சிறிய தண்டனை அளிக்க முற்பட்டதாகத் தெரிவித்தார்.
மௌலானாவின் ஆலோசனையின் படி இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைப் பற்றி அறிந்த HSR லேஅவுட் காவல் துறையினர் சாதாரண மக்கள் போல் உடையணிந்து உள்ளே சென்று மாணவர்களின் நிலையைக் கண்டும், கேட்டும் அறிந்தனர்.
அதன் பின் மாணவர்களின் தந்தையையும், ஆசிரியரையும் கைது செய்தனர்.இளைஞர்களின் நீதி விதியின் கீழ் இருவரையும் விசாரிக்கக் காவல்துறை முடிவு செய்துள்ளது.குழந்தைகள் நலச் சங்கமும் இம்முறைகேட்டைத் தட்டிக் கேட்கக் களமிறங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு யமுனா நகர் மதராசாவில் ஒரு மாணவன் சரிவர படிக்கவில்லை என்ற காரணத்திற்காக சங்கிலியால் பிணைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்செயலாக மகனைக் காணச் சென்ற தந்தை தன் மகனின் நிலைகண்டு நிலைகுலைந்து புகார் அளித்ததும் நினைவிருக்கலாம்.