July 2, 2016
தண்டோரா குழு
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் தான் 3 நாட்கள் சிக்கி பின்னர் உயிர் தப்பியுள்ளதாக கூறுகிறார். ஆனால், இவர் கூறுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை.
56 வயது நிரம்பிய லூஜி மார்குவெஸ் ஒரு மீனவர் ஆவார். இவர் அண்மையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். புயல் காரணமாக அவரின் படகு கவிழ்ந்தது. ஸ்பானிய கரையோர காவல்படையினரால் லூஜியை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், ஆச்சரியகரமாக சில தினங்களுக்குப் பின் லூஜி மார்குவெஸ் வீடு திரும்பினார். இது குறித்து அவர் கூறும்போது, தான் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் 3 நாட்கள் இருந்து உயிர் பிழைத்ததாக தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
புயலில் தனது படகு கவிழ்ந்த பின்னர் இராட்சத திமிங்கிலம் ஒன்றினால் தான் விழுங்கப்பட்டதாக லூஜி மார்குவெஸ் தெரிவித்தார். திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் கடும் இருளாக இருந்தது. மேலும் அனைத்தும் கறுப்பாகத் தெரிந்தன. நீர் புகாத தமது கைக்கடிகாரத்தின் ஒளி மூலம் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த சிறிய மீன்களை இனங்கண்டு அவற்றைப் பச்சையாக உட்கொண்டு உயிர்பிழைத்ததாகத் தெரிவித்தார்.
இறுதியில் திமிங்கிலம் என்னை வெளித்தள்ளியது என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவர் உயிர்பிழைத்தது ஓர் அற்புத நிகழ்வு என லூஜி மார்க்குவெஸின் மனைவி பெனலொப் தெரிவித்துள்ளார். ஆனால், லூஜி மார்குவெஸின் கூறுவதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.