• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயர்ரக வளர்ப்பு நாய்கள் கடித்து உரிமையாளர் பலி

July 14, 2016 தண்டோரா குழு

பொதுவாக வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்ப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். பூனைகளை விட நாய்களை வளர்ப்பதில் தான் மக்களுக்கு அதிக விருப்பம். அதனுடன் விளையாடுவது, அவற்றிற்குப் பிரியமான உணவை வழங்குவது, அதை அழைத்துக் கொண்டு நடைப்பயிற்சி செய்வது போன்ற செயல்களைச் செய்து மகிழ்வது அவர்களுக்கு அதிகமான மகிழ்ச்சி.

ஆறறிவு உள்ள நமக்கே சரியான நேரத்திற்கு உணவு கிடைப்பது தாமதமானால் கோபம் அடைவது உண்டு. அந்த ஐந்தறிவு உள்ள விலங்குகள் பசி தாங்குமா? அவை கோபம் அடைந்து விபரீத செயலில் இறங்கினால் என்ன ஆகும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என்று தான் சொல்ல வேண்டும்.

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் ரயில்வே பாதுகாப்பு ஐஜியின் அலுவலக உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சோளிங்கர் அடுத்த பானாவரம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன்(56). இவர் சென்னையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஐஜி அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்குச் சிவகாமி(48) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கிருபாகரனுக்குச் சொந்தமாக வீட்டின் அருகே மாந்தோப்பு உள்ளது. இங்கு அவர் உயர்ஜாதி நாய்களை வளர்த்து வந்தார். தினமும் வேலை முடிந்து திரும்பியதும் இரவு 8 மணி அளவில் கிருபாகரன் மாந்தோப்புக்கு சென்று அந்த நாய்களுக்கு இறைச்சி மற்றும் உணவு வழங்குவது வழக்கம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய நாய் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு நாய்களுக்கு இறைச்சி போட தாமதமாகிவிட்டது. நாய்கள் உணவுக்காகக் கிருபாகரன் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தன. கோரப்பசி ஏற்பட்டதால் அவை வெறியுடன் இருந்தன. நாய்கள் பசியுடன் இருக்குமே என்று கருதிய கிருபாகரன் இறைச்சி, உணவு எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக இரவு 10 மணியளவில் மாந்தோப்புக்கு சென்றுள்ளார்.

அவரைக் கண்டதும் 2 நாய்களும் பாய்ந்து சென்று கிருபாகரனை கடித்துக் குதறின. இதனைச் சற்றும் எதிர்பாராத கிருபாகரன் அலறினார். ஆனால் கோர பசியில் இருந்த நாய்கள் தங்களை ஆசையாக வளர்த்த எஜமான் என்றும் பாராமல் அவரைக் கடித்து குதறியதில் கிருபாகரன் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து காப்பாற்ற முயன்றபோது அவர்களையும் கடிக்க முயன்றது. இதனால் அவரைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறினர். இந்நிலையில் அங்கு வந்த அவரது மனைவி இரு நாய்களையும் சமாதானப்படுத்தி பின் அவரை மீட்டுப் பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பானாவரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கிருபாகரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கிருபாகரன் வளர்த்தது ராட்வைலர் வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. ஜெர்மன் நாட்டு இனத்தைச் சேர்ந்த இந்த நாய்கள் உயரம் சற்று குறைவாக இருந்தாலும் வாய்பகுதி நீளமாக இருக்கும். கடிக்கும் போது மனித எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு பலம் வாய்ந்த தடைகளைக் கொண்டவை என்று கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் டாக்டர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, இந்த வகை நாய்களைக் காவல் பணிக்காக வளர்ப்பார்கள். ராட்வைலர் நாய்க்குட்டிகள் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. இந்த வகை நாய்கள் மனிதர்களுடன் எளிதில் பழகாது. முறையான பயிற்சி அளித்தாலும் இவை கட்டளைக்கு அடங்கி நடக்கும் என்று கூற முடியாது.

சரியான நேரத்துக்கு இரை கொடுக்கவில்லை என்றாலோ அல்லது அதற்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டாலோ கடித்துவிடும். அதன் குணங்களை அறிந்து அருகில் செல்வது நல்லது என்று எச்சரிக்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.

மேலும் படிக்க