August 10, 2018 தண்டோரா குழு
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன்,அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என தமிழக போலீசிடம் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்தார். இதற்கிடையில்,தமிழக காவல்துறை சார்பில் தேடப்படும் குற்றவாளியாக திருமுருகன் காந்தியை அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து,ஐ.நா மன்றத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருமுருகன் காந்தி விமான மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தார்.அப்போது விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து,தனிப்படை போலீசார் மூலம் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில்,இவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ்,திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தால் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட முடியாது.வேண்டுமானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என நீதிபதி பிரகாஷ் கூறியுள்ளார்.மேலும் திருமுருகன் காந்தியை அவசர அவசரமாக கைது செய்தது ஏன்? வர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.