October 8, 2016 தண்டோரா குழு
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்கு திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் இன்று அப்பலோ மருத்துவமனைக்குச் சென்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் காலை சந்தித்து விட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக அப்போலோ மருத்துமனைக்குச் சென்றார். சுமார் 20 நிமிடங்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வெளிவந்தார் ஸ்டாலின்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 22ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை முக்கிய தலைவர்கள் சந்தித்துவிட்டு செல்கின்றனர். ஆகையால், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி என்னை முதல்வரை சந்தித்து நலம் விசாரித்து வரச் சொன்னார். எனவே நான், திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகிய மூவரும் முதல்வரைச் சந்திக்கச் சென்றோம் .
முதல்வரை நேரடியாகச் சந்திக்க முடியாவிட்டாலும், அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் முதல்வர் உடல்நலம் தேறி வருவதாக எங்களிடம் தெரிவித்தனர். எனினும், முதல்வர் பூரணநலம் பெற்று வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சார்பாகவும், திமுக சார்பாகவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.