August 9, 2016 தண்டோரா குழு
சேலத்திலிருந்து வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஐ.ஓ.பி., வங்கியிலிருந்து, பழைய நோட்டுகளை ஏற்றிக்கொண்டு ரயில் சேலம், ஆத்தூர், விழுப்புரம் வழியாகச் சென்னை வந்தது. அதில் 228 பணப்பெட்டிகள் கொண்ட அந்த விரைவு ரயிலில் மர்ம நபர்கள் நள்ளிரவில் மேற்கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி சில பெட்டிகளை மட்டும் உடைத்துப் பல கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ரயில் சென்னை வந்த பிறகே தெரியவந்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையம் வந்த பின்னர் தான், பணப்பெட்டிகள் திறந்து கிடந்தது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது கண்டுபிடிக்கப் படவில்லை.
தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். சம்பவம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பணம் ரயிலில் கொண்டு வருவதை முன்பே அறிந்த சிலரே பணத்தைக் கொள்ளையடித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ரயில் வழியில் எங்காவது நின்றதா என்றும், அல்லது இந்தக்கொள்ளையில் வங்கி மற்றும் ரயில்வே ஊழியர்கள் யாராவது சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பணத்தின் மதிப்பு சுமார் 342 கோடிகள் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்த போதும், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சில லட்சங்களே இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.