October 31, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம், புதுவையில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகம், கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் சில இடங்களில் 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், உடுமலை, வாடிப்பட்டியில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது” என்று பாலசந்திரன் தெரிவித்தார்.