September 3, 2016 தண்டோரா குழு
அன்னை தெரசாவுக்கு நாளை வாடிகனில் நடைபெறும் விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
இதனையொட்டி ரோம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ரோம் நகரம் முழுவதும் சிறப்பு இசை நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அன்பு, கருணை, மனித நேயம் என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த அன்னை தெரசாவுக்கு வாடிகனில் நாளை நடக்கவிருக்கும் கோலாகல விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.
அல்பேனியா நாட்டில் கடந்த 1910ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் அன்னை தெரசா. அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா போஜாஸ்யூ. அவர் இளம் வயதிலேயே சமூக சேவையில் ஈடுபட்டார். கடந்த 1929ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பிறகு அவரது சேவை இங்கேயே நிரந்தரமானது.அங்கு அவர் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1950ம் ஆண்டு, “மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்” என்னும் சேவை அமைப்பை கொல்கத்தாவில் தொடங்கினார்.
ஏழை மக்கள், எச்.ஐ.வி. எயிட்ஸ், தொழுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னை தெரசா 47 ஆண்டுகள் சேவை புரிந்தார்.1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதியன்று, தான் இறக்கும் வரை, சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அவருடைய நினைவு தினத்தையொட்டி அவருக்குப் புனிதர் பட்டம் அளிக்கும் விழா வாடிகன் நகரில் நாளை நடைபெறுகிறது.
இந்த விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு கலந்து கொள்கிறது. இவர்கள் நேற்று டெல்லியில் இருந்து ரோம் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதே போல், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.
ரோமன் கத்தோலிக்கர்களில் ஒருவர் இறந்தால் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் அதிகாரம் வாடிகன் கத்தோலிக்க திருச்சபைக்குத் தான் உள்ளது. அதற்கு முன்னர் அவர் அருளாளர் என்ற அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும். புனிதர் பட்டம் பெறுவதற்கு 2 அற்புதங்களை நிகழ்த்தி இருக்க வேண்டும்.
தன் வாழ்நாள் முழுவதும் தொழுநோயாளிகளுக்காகவும் ஏழை, எளிய மக்களுக்காகவும் தன்னலமற்ற சேவைப் புரிந்த அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
அப்போதுதான் மேற்குவங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண் வயிற்றில் புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டு வந்ததும், அதன் பின் அன்னை தெரசா உருவம் பதித்த சங்கிலியை அணிந்து பிரார்த்தனை செய்து வந்த பின் புற்றுநோய் குணமானதாகவும் தெரியவந்தது.
இதை வாடிகன் தீவிரமாக ஆய்வு செய்த பின், கடந்த 2003ம் ஆண்டு அன்னை தெரசாவை ‘அருளாளர்’ என்று அங்கீகரித்தது. இதன் பிறகு புனிதர் பட்டம் வழங்குவதற்கான இன்னொரு அற்புதத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு அன்னை தெரசா நிகழ்த்தி உள்ளார் என்று தெரிய வந்ததுயுள்ளது.
பிரேசில் நாட்டில் ஒருவர் மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக அவரும் அவரது குடும்பத்தினரும் அன்னை தெரசாவை மனதுருக பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அதன்பின் அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்த 2வது அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து அன்னைக்குப் புனிதர் பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார்.
மத்திய அரசு அன்னை தெரசாவிற்கு 1980ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் விதமாய் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1979ம் ஆண்டு வழங்கப்பட்டது.
வாடிகனில் நாளை நடக்கவிருக்கும் விழாவிற்காக ரோம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.