August 5, 2016 தண்டோரா குழு
மும்பையில் மூன்றாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாகியுள்ளன. சில விமானங்கள் சுற்றிச்செல்லவும், ஒரு விமானம் திருப்பியும் விடப்பட்டுள்ளது.
இதனால் மும்பையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ரயில் போக்குவரத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கனமழை காரணமாக மால்ஜி ரத்தோவு சவுக், பிபிடி காலனி, சியோன், கிங் சர்கிள், ஹிந்த் மாதா, பிரதிக்ஷா நகர் மற்றும் நேஷனல் கல்லூரி பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பந்தராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை பகுதிகள், மேற்கு எக்ஸ்பிரஸ் சாலை, கிழக்கு பிரிவே, தாதர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பை – கோவா இடையிலான பாலம் இடிந்து விழுந்தது தெரியாமல் சென்று ஆற்றுக்குள் விழுந்த பேருந்தைத் தேடும் பணி 3வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்றது. இந்தச் சூழ்நிலையில், தேடும் பணியை பார்வையிடச் சென்ற அமைச்சர் பிரகாஷ் மேத்தா, செல்பி எடுத்துக் கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே மும்பை கோவா மஹத் பாலம் இடிந்த போது வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்து 22 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும், அவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீத்தல் உகாலே தெரிவித்துள்ளார்.