August 29, 2016 தண்டோரா குழு
மியான்மர் அதிபர் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்து வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்தார்.
மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி கடந்த மார்ச் மாதம் ஆட்சியமைத்தது.இந்நிலையில்,கடந்த 22ம் தேதி மியான்மர் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு அதிபர்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் நான்கு நாள் அரசு முறைப் பயணமாக,மியான்மர் அதிபர் யு ஹிடின் கியாவ் இந்தியா வந்துள்ளார்.சனிக்கிழமை வந்த அவர் அன்றே புத்த கயாவிற்கு சென்று பார்த்தார்.பின்னர் நேற்று அவரது மனைவியுடன் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைச் சென்று பார்வையிட்டார்.
இந்நிலையில் இன்று காலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரஜை சந்தித்து பல்வேறு முக்கிய ஒப்பந்தகள் குறித்துப் பேசி வருகின்றனர்.இது தான் மியான்மர் அதிபர் வெளிநாட்டில் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.