July 30, 2016 தண்டோரா குழு
தற்போது உள்ள தலைமுறைக்கு முன்பு உள்ள தலைமுறைவரை மைசூர் சண்டெல் சோப்பு என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. நூறு ஆண்டுகளாக மக்கள் மனதைத் தனது சந்தன வாசத்தால் கொள்ளையடித்து வைத்திருந்த பெருமை இந்தச் சோப்புக்கே இருக்கிறது.
இன்றும் இந்தச் சோப்புக்கு அடிமையாக இருப்பவர்களும் உள்ளனர். அந்த காலத்தில் மிகச் சிறந்த நடிகை என்ற பெயரைப் பெற்றவர்கள் மட்டுமே இந்த நிறுவன விளம்பரத்தில் நடிக்க முடியும் என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய மைசூர் சண்டெல் சோப் என்பது கர்நாடக அரசின் நிறுவனமான கர்நாடக சோப் அண்ட் டிடர்ஜன்ட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் சோப் ஆகும். இந்த நிறுவனம் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கதர் பார்கள் வந்துகொண்டு இருந்த நிலையில் இந்திய முழுவதும் சந்தன சோப்பு எனப் புகழ்பெற்று நிலைத்து இருந்தது இந்த மைசூர் சண்டெல் சோப் மட்டும்தான். பின்னர்தான் பல நிறுவனங்கள் போட்டிக்கு வந்துள்ளன. ஆனாலும் தனக்கென ஒரு மார்கெட்டை கொண்டு இன்னமும் மக்கள் மனதை விட்டு நீங்காத ஒரே அரசு நிறுவன பொருள் இதுவாகத்தான் இருக்கமுடியும்.
ஏனென்றால் அங்குப் பணிபுரிபவர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றி நிறுவனத்திற்குப் பெயர் பெற்றுத்தரவேண்டும் எனப் பணியாற்றுவது தான் காரணம். இந்த நிறுவனம் 1916ம் ஆண்டு அப்போதைய மைசூர் மகாராஜா நல்வாடி கிருஷ்ணா ராஜ உடையார் மற்றும் அவரது திவான் எம்.விஸ்வேஸ்வரய்யா என்பவர்களால் துவங்கப்பட்டது.
முதலில் சந்தன மரத்தில் இருந்து சந்தன எண்ணெய் மட்டும் எடுக்கும் நிறுவனமாக நிறுவப்பட்ட இது 1918ம் ஆண்டுதான் அந்த எண்ணெய்யை விற்பனைக்குக் கொண்டுவந்தது. ஆனாலும் நிறுவனம் நிறுவப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் நிறுவனத்தில் பல்வேறு மாறுதல்களைச் செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
இதில் பெங்களூரு வடமேற்குப் பகுதியில் உள்ள இடத்தில் 27 கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையைக் கட்ட முடிவெடுத்துள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆலையில் ஆண்டுக்கு 15,000 டன் சோப்புகள் தயாரிக்க மாநில அமைச்சரகம் அனுமதியளித்துள்ளது எனத் தெரிவித்தார். இந்த நிறுவனம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷாம்ல இக்பால், இந்த நிறுவனத்தில் முதல்கட்டமாக 100 பணியாட்களை வேலைக்கு அமர்த்த முடிவிடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் நூற்றாண்டு கொண்டாத்தைனால் ஏற்கனவே இங்குப் பணியாற்றும் 542 பணியாளர்களுக்கும் 20,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் மட்டும் 477 கோடி ரூபாய் வர்த்தம் நடைபெற்றுள்ளது எனவும் அதில் 47 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது எனவும் தெரிவித்த நிறுவன அதிகாரிகள் புதிதாக ஊதுபத்திகளும், சந்தன மாங்காய் ஹன்ட் வாஷ் லிக்வுட் போன்ற பொருட்களையும் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஒரு அரசு நிறுவனம் நூறு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருப்பது அந்த மாநிலம் மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை சேர்க்கக்கூடிய விசயமாக உள்ளது.