August 13, 2016 தண்டோரா குழு
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் சுமார் 600க்கும் அதிகமான ஏக்கர் நிலத்தில் தற்போது சிறிய வெங்காயம் மற்றும் பல்லாரி (பெரிய வெங்காயம்) ஆகியவை பயிரிடப்பட்டு அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இரு வெங்காயங்களுக்கும் சராசரியாக கிலோவிற்கு 5 ரூபாய் மட்டுமே வியாபாரிகள் வழங்கி வருகின்றனர்.
ஆனால் அதை உற்பத்தி செய்யவே கிலோ ஒன்றிற்கு சுமார் 20 ரூபாய் செலவாகிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாவூர் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் வெங்காயத்திற்கு நிலையான விலை கிடைக்க வேண்டும் எனக் கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் உற்பத்தி விலைக்குக் கூட விற்பனையாகாத வெங்காயத்தை விற்று
என்ன பலன் எனக் கேட்டு அவற்றைச் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அ.இ.வி.ச வட்டாரச் செயலாளர் தளபதி கூறும் போது, வெங்காயம் என்பது எப்போதுமே ஒரு வித்தியாசமான பயிராகவே உள்ளது. ஒன்று விளைச்சல் இல்லாமல் விலை உச்சத்தைத் தொட்டுவிடுகிறது. அல்லது அதிக விளைச்சலைக் கொடுத்து விலையை அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது.
ஆனாலும் விலை உச்சத்தில் இருக்கும்போது அது விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுப்பதில்லை. இடைத்தரகர்களே லாபம் பார்க்கின்றனர். ஆனால் விலை குறையும்போது மட்டும் விவசாயிகள் நஷ்டமடைய வேண்டும். இந்த நிலை மாற அரசு இது போன்ற நிலையில் வெங்காயத்திற்குக் கிலோவிற்கு 25 என விலை நிர்ணயம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதுமட்டுமின்றி அரசே கொள்முதல் செய்து அதைப் பயனுள்ள பொருட்களாக மாற்றும் தொழிலை செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.