September 2, 2016 தண்டோரா குழு
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய அதிரடி சலுகைகளால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடந்தது. 42ஆண்டுகளில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஒன்று ‘லைவ்’ செய்யப்படுவதும் இதுவே முதல் முறை. காரணம் ரிலையன்ஸ் ஜியோ, இந்த புதிய 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினார் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
அவர் அச்சேவையை அறிமுகப்படுத்திய அடுத்த சில வினாடிகளில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #RelianceAGM ஹேஷ்டேக் ட்ரென்ட் ஆனது.பின்னர் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினார் முகேஷ் அம்பானி.
அவரது 45 நிமிட பேச்சு பங்குச்சந்தைகளில் கடுமையாக எதிரொலித்தது.இதனால்,ஏர்டெல்,ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 8.99 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 302 ரூபாய்க்கு விற்பனையானது.நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஐடியா செல்லுலார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு 9.09 சதவீதம் வீழ்ச்சியடைந்து 85 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுமட்டுமின்றி முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 6.49 சதவீதம் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய அம்சங்கள்,
– நாடு முழுவதும் இலவச மொபைல் அழைப்புகள்.
– ரோமிங்க் கட்டணம் ரத்து.
– 4ஜி இணையத்தில் 1 ஜிபி பயன்பாட்டுக்கு 50 ரூபாய் கட்டணம்.
– மாணவர்களுக்குக் கூடுதலாக 25 சதவீத இணையப் பயன்பாடு இலவசம்.
– முதல் 4 மாதங்களுக்கு மட்டும் இலவச இணையப் பயன்பாடு.
– 19 ரூபாயில் இருந்து மொபைல் திட்டங்கள்.
– குறைவாகப் பயன்படுத்துவோருக்கு அடிப்படை திட்டம் மாதத்துக்கு 149 ரூபாய், அதிக அளவு இணையம் உபயோகிப்போருக்கு மாதத்துக்கு 4,999 ரூபாய் வரை.
– ரிலையன்ஸின் ‘லைஃப்’ பிராண்ட் மொபைல்கள் 2,999 ரூபாயில் இருந்து விற்பனையாகும்.
– ரிலைய்ன்ஸ் ஜியோ செப்டம்பர் 5ம் தேதி முதல் சந்தைக்கு வருகிறது.