January 11, 2018 தண்டோரா குழு
மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய புதிய சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி இன்று வேலுமணி தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். மேயர் வேட்பாளர் என ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கு அம்மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மக்களும் வாக்களித்து யார் அதிக வாக்குகள் பெறுகிறார்களோ அவர் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். இதற்கிடையில், கடந்த 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கவுன்சிலர்கள் மூலமாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய முறையை கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் அதற்கான புதிய சட்டமும் இயற்றப்பட்டது.இதன் மூலம் கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ அதன் அடிப்படையில் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்படுகிறது. அதற்கான சட்டமசோதாவை இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த புதிய மசோதாவின் படி, மாநகராட்சி மட்டுமல்லாமல் பேரூராட்சி மற்றும் நகராட்சியின் தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல் நேரடி தேர்வு மூலம் சிறந்த நிர்வாக முறையை கொண்டு வர முடியும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்பில் தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை 4-வது முறையாக நீட்டிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.