October 27, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர்,கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், எஸ்.பி.பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
“கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது; ஏதோ பதற்றம் நிலவியது போல சிலர் செய்தி வெளியிடுவது கண்டனத்திற்குரியது; சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.
வெடி விபத்து சம்பவம் தொடர்பாக காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.டிஜிபி-நேரடியாக வந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.காவல்துறையினர் துரிதமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர், அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது.
தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமையை தான். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.