October 22, 2016 தண்டோரா குழு
மலை மாவட்டமான நீலகிரி அதிகாரிகளின் அலட்சியத்தால் தனது தனித்தன்மையையும், பொலிவையும் இழந்து வருகிறது. அதிகரிக்கும் விதிமீறல்களால் பருவ நிலையில் மாற்றம், இயற்கைப் பேரிடர்களைச் சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதிகள் கொண்டுள்ளது. இதனால், இங்கு பசுமை நிறைந்து காணப்படுவதோடு, இதமான வானிலையும் நிலவுகிறது. இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கவும், இதமான இயற்கைச் சூழலை அனுபவிக்கவும் இம்மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதனால், உலக அளவில் நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகையாலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனங்களை அழித்தும், மலைப் பகுதிகளை வெட்டியும் சுற்றுலாக் குடில்களும் (காட்டேஜ்கள்), பெரிய பெரிய உல்லாசப் போக்கிடங்கள் (ரிசார்ட்டுகள்) என விதிமுறைகளை மீறி கான்கிரீட் காடுகளாக மாறி, சுற்றுச்சூழல் பாதித்த மாவட்டமாக மாறி வரும் அவலநிலை உருவாகியது.
மலை மாவட்டமாக இருப்பதால் சமவெளிப் பகுதிகளில் உள்ளது போன்ற மண் அமைப்பு இங்கு இல்லை. மழைக்காலத்தில் மிருதுவாகவும், வெயில் காலத்தில் இறுக்கமாகவும் இருக்கும். இப்பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்காக 6 அடி முதல் 7 அடி வரை மண் தோண்டப்படுகிறது.
இவ்வாறு கட்டப்படுவதால் நிலநடுக்கம், நிலசரிவு, மண்சரிவு போன்ற இயற்கை இடர்ப்பாடுகளுக்கு ஆளாகும் அபாயம் இந்த மாவட்டத்தில் உள்ளது. தோண்டப்படும் மண் மழைக்காலத்தில் அடித்துச் செல்லப்பட்டு, வாய்க்கால்கள் வழியே தண்ணீர் சேகரிக்கப்படும் அணைகளைச் சென்றடைகிறது.
இதனால், அங்கு அணையின் கொள்ளளவு குறைந்துவிடுகிறது. இதன்விளைவாக, குறைவான நீர் சேகரிக்கப்பட்டு, குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு வழி ஏற்பட்டு விடுகிறது. மண்ணின் தன்மையும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகின்றன.
இம்மாவட்டம் நிலநடுக்கம் ஏற்படும் பட்டியலில் இருப்பதால் ஆழ்துளைக் கிணறு அமைக்கவும், ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், விதிமுறைகளை மீறி கட்டடங்களைக் கட்டுவதற்காக சரிவான பகுதிகளைச் சமன் செய்யவும், ஆழ்துளைக் கிணறு அமைக்க யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் தடை தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களை இயக்கி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு செய்பவர்கள் அந்தந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தனியாகக் கவனிப்பதே இந்த மாதிரியான விதிமீறல்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்து வருகிறது.
“சமவெளிப் பகுதியிலிருந்து வருவோர் தங்களுக்கு வசதிக்கு ஏற்ப மலைகளின் இயற்கை அமைப்பையே மாற்றி அரசு உயர் அதிகாரிகளுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும் கையூட்டு கொடுத்து கட்டட அனுமதி பெற முயல்கிறார்கள். அதற்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இசையாமல் இருந்து, அனுமதி தர மறுத்தாலே மாவட்டத்தின் தனித்தன்மை காப்பாற்றப்படும்” என்று இயற்கை ஆர்வலர் பி. வேணுகோபால் கூறினார்.
“மாவட்டத்தில் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது. ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளை அமைக்காமல் இருக்க வேண்டும். அணைகளைத் தூர்வார மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நிலத்தடி நீரைக் காப்பாற்றி, அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்ல முடியும். விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்டுகளைக் கண்டறிந்து அகற்றினால் மட்டுமே இயற்கைப் பேரிடர்களில் இருந்து நீலகிரி மாவட்டத்தைக் காப்பாற்ற முடியும்” என்று இந்திய நீர் மற்றும் மண் வள நிறுவன விஞ்ஞனி எஸ். மணிவண்ணன் குறிப்பிட்டார்.