October 10, 2017 தண்டோரா குழு
சென்னையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் 2000 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் பழைய பொருட்களை தேக்கி வைத்திருந்த 2000 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தொற்று நோய் தடுப்பு பிரிவு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பரவ காரணமாக இருக்கும் கடைகளை ஆய்வு செய்தது.
இந்நிலையில், இந்த ஆய்வில், பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் கடைக்காரர்கள் கழிவுப் பொருட்களை தேக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கொசுக்கள் உற்பத்தி ஆகும் வகையில் செயல்பட்ட 2000 கடைக்காரர்களுக்கு தொற்றுநோய் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும்,48 மணிநேரத்திற்குள் கொசுக்கள் உருவாகும் இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும்,இதனைச் செயல்படுத்த தவறும் பட்சத்தில், 6 மாதம் சிறை அல்லது அபராதம் வசூலிக்கப்படும் எனத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.