• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பருப்பு மற்றும் பாமாயில் தடையின்றி கிடைக்க வேண்டும் – ராமதாஸ்

October 14, 2016 தண்டோரா குழு

தீபாவளிக்கு முன்பாக நியாயவிலைக்கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தடையின்றி கிடைக்க அரசு வகை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இந்த மாதம் இதுவரை பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகிய பொருட்கள் வழங்கப்படவில்லை. இதற்கான காரணத்தைக் கூற நியாயவிலைக் கடை ஊழியர்கள் மறுக்கின்றனர். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் பருப்பு உற்பத்தி குறைந்து விட்டதால் துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றின் விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளன. அதை வாங்க வசதியில்லாத நிலையில், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவற்றை நம்பியே ஏழை மக்கள் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் நியாயவிலைக் கடைகளில் சிறப்பு பொதுவினியோகத் திட்டத்தின் கீழ்
வழங்கப்பட்டு வந்த பருப்பு மற்றும் பாமாயில் வினியோகம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதா? என்பதைக் கூட தமிழக அரசு அறிவிக்காதது சரியான அணுகுமுறையல்ல.

தமிழ்நாட்டில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தற்காலிக ஏற்பாடாகவே தொடங்கப்பட்டது என்றாலும், காலப்போக்கில் இது தவிர்க்க முடியாததாகி விட்டது. இது தற்காலிகத் திட்டம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் அரசாணை மூலம் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

அத்திட்டத்தை நீட்டிப்பதற்கான அரசாணை இன்று வரை பிறப்பிக்கப்படாததால் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கான சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவே பொருளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் நீட்டிக்கப்பட்டு வந்த இந்த திட்டம் கடந்த மாதம் நீட்டிக்கப்படாததற்கு காரணம் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முடங்கிக் கிடகிறது அல்லது இத்திட்டம் தேவையில்லை என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்து விட்டதா? என்பது தெரியவில்லை. இது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தாலும் அரசு நிர்வாகம் எந்தவித இடையூறும், தடையும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை நீட்டிக்கக் கூட முடியவில்லை என்றால் தமிழக அரசு அடியோடு முடங்கி விட்டதாகத் தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

ஒருவேளை இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி வரை செலவிட வேண்டியிருப்பதால், அதை தமிழக அரசு திட்டமிட்டு நிறுத்தி விட்டது என்றால் அது மக்கள் விரோத செயலாகும். இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது.

பருப்பு மற்றும் எண்ணெய் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிறப்பு பொதுவினியோகத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் லிட்டர் ரூ.25 என்ற விலையிலும் வழங்கப்பட்டு வந்தன.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பயனை விட, இத்திட்டத்தை செயல்படுத்திய ஆட்சியாளர்களுக்குத் தான் அதிக பயன்கள் கிடைத்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை விதிமுறைகளுக்கு மாறாக, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகின்றன்றன.

பருப்பு கொள்முதலில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.750 கோடி முதல் ரூ.1200 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணமான ஊழல்கள் இன்று வரை தடுக்கப்படவில்லை.
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பயனாளிகளின் எண்ணிக்கை 6 விழுக்காடு மட்டுமே உயர்ந்திருக்கிறது.

இத்திட்டத்திற்கான பருப்பு வகைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், அவற்றின் விலையும் பெருமளவில் அதிகரிக்கவில்லை. ஆனால், தொடக்கத்தில் ரூ.500 கோடியாக இருந்த இந்த திட்டத்திற்கான மானியம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2000 கோடி என்ற அளவுக்கு, அதாவது 400% அதிகரித்திருப்பதிலிருந்தே இதில் எந்த அளவுக்கு ஊழல் நடக்கிறது என்பதை உணரலாம். அதுமட்டுமின்றி, இத்திட்டத்திற்காக வாங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றில் 50% மட்டுமே நியாயவிலைக்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

மீதமுள்ளவை ஆட்சியாளர்களால் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்தினாலே இந்தத் திட்டத்திற்கான செலவை பாதியாக குறைத்து விட முடியும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு பொது வினியோகத் திட்டம் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் காலாவதியாகிருந்தாலும், அவர்களே திட்டமிட்டு நிறுத்தியிருந்தாலும் அதனால் பாதிக்கப்படுவது ஏழைகள் தான். எனவே, இந்தத் திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக பிறப்பித்து, தீபாவளிக்கு முன்பாக நியாயவிலைக்கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தடையின்றி கிடைக்க அரசு வகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க