• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்கர் முத்தமிட்ட செவிலியர் மரணம்

September 12, 2016 தண்டோரா குழு

1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. அப்போரின் முடிவில் ஜப்பான் நாடு கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தது. போரிலிருந்து நாடு திரும்பிய அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரால் முத்தமிடப்பட்ட செவிலியர் தனது 92வது வயதில் நேற்று மரணமடைந்துள்ளார்.

உலக மக்களால் மறக்க முடியாத புகைப்படத்தில் இடம் பெற்றவர் இந்தச் செவிலியர். அவரது பெயர் கிரேட்டா ஜிம்மர் பிரைட்மேன். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த அவர் தனது 15வது வயதில் அமெரிக்காவிற்குக் குடும்பத்துடன் தப்பிச் சென்றார். மேலும், இரண்டாம் உலகப் போர் உக்கிரத்தில் இருந்த போது கிரேட்டா, தனது செவிலியர் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தது. இந்த வெற்றியை நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி விழா போல கொண்டாடி மகிழ்ந்தனர். போரில் கலந்து கொண்ட வீரர்கள் நாடு திரும்புவதை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் அங்குக் கூடியிருந்தனர். அவர்களில் கிரேட்டாவும் ஒருவர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கடற்படை வீரர், கிரேட்டாவைக் கட்டிப்பிடித்து வளைத்து அவரது உதட்டில் முத்தமிட்டார். அதை ஆல்பிரட் ஈசன்ஸ்டெட் என்பவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் உலக அளவில் வைரலாக பரவியது. அந்தச் செவிலியர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 92.

கிரேட்டாவுக்கு முத்தம் கொடுத்த வீரரின் பெயர் ஜார்ஜ் மென்டோன்சா. அவர் அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர். போரிலிருந்து திரும்பிய அவர் உண்மையில், கிரேட்டாவுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ரீட்டா பெட்ரி என்பவரைத் தேடித்தான் ஓடி வந்தார். ஆனால் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்த கிரேட்டாவுக்கு தவறுதலாக முத்தமிட்டார்.

ரீட்டாவும், ஜார்ஜும் பின்னர் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழ்ந்தனர் என்பது சுவாரஸ்யமானது. இந்தப் புகைப்படம் தி கிஸ் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது. இந்தப் படத்தில் இருக்கும் பெண் யார் என்பது பல காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இந்தப் புகைப்படத்தை முதலில் லைப் பத்திரிகைதான் வெளியிட்டது. பின்னர் இது மீண்டும் பிரபலமானது. கடந்த 1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதப் பதிப்பில் இந்த ஜோடி யார் என்ற கேள்வியுடன் மீண்டும் பரபரப்பு கிளம்பியது. பின்னர் தான் அது ஜார்ஜ், கிரேட்டா என்பது தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் குறித்து கிரேட்டாவின் மகன் ஜோஷுவா பிரைட்மேன் கூறுகையில், அது ஒரு சாதாரண சம்பவம் தான். ரொமான்ஸோ அல்லது வேறு எதுவுமோ அதில் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை. வெற்றி மகிழ்ச்சியில் எனது தாயாருக்கு முத்தமிட்டுள்ளார் ஜார்ஜ் என்று கூறினார்.

கிரேட்டாவின் பெற்றோர் ஆஸ்திரேலியாவில் நடந்த இனப்படுகொலையில் சிக்கி உயிரிழந்தனர். அதன் பின்னர் தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குத் தப்பி வந்த கிரேட்டா அங்கேயே தங்கிவிட்டார். 2ம் உலகப் போரின் முடிவை பற்றிப் பேசும் போதெல்லாம் இவரது முத்தப் படமும் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேட்டாவின் கணவர் டாக்டர் மிஷா பிரைட்மேன் ஏற்கனவே இறந்து விட்டார். 92 வயதான கிரேட்டா வயோதிகம் காரணமாக ரிச்மான்ட்டில் உள்ள தனது இல்லத்தில் நேற்று மரணமடைந்தார். அவருடைய கணவரின் கல்லறைக்கு அருகிலேயே கிரேட்டாவின் உடலும் அர்லிங்டன் தேசிய கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க