January 18, 2018 தண்டோரா குழு
பத்மாவதி திரைப்படத்திற்கு நான்கு மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் ராஜஸ்தானின் சித்துர்கர் ராணி பத்மினியின் வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் பத்மாவதி.இந்தப்படத்தில், ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு பத்மாவதி திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட தணிக்கை குழுவினர் சான்றழித்துள்ள நிலையில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் தணிக்கை குழுவினர் சான்றிதழ் வழங்கிய பிறகு தடை விதிப்பது முறையாகாது என்றனர்.மேலும் படம் வெளியாவதற்கான தடையை நீக்கிய நீதிபதிகள்,வேறு எந்த மாநிலமும் படத்திற்கு தடை விதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர்.