November 28, 2017 தண்டோரா குழு
பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிட தடை கோரிய மனு தள்ளுபடி செய்து படத்தை எதிர்ப்பவர்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
இயக்குனர் பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் ராஜஸ்தானின் சித்துர்கர் ராணி பத்மினியின் வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் பத்மாவதி.
இந்தப்படத்தில், ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. படத்தின் இயக்குனர் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு பல்வேறு தரப்பில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்த மாதம் வெளியாக இருந்த இந்த படம், 2018க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
எனினும், பத்மாவதி படத்தை, பிரிட்டனில் திரையிட அந்நாட்டு தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதோடு மற்ற நாடுகளில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிநாடுகளில் வெளியிட தடையில்லை என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும், ஒரு திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் முன், பொதுவாழ்வில் இருப்பவர்கள் எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று படத்தை எதிர்ப்பவர்களை நீதிபதி கண்டித்துள்ளார். தணிக்கை சான்றிதழ் முன் கருத்து தெரிவிப்பது திரைப்பட தணிக்கை துறையை அவமதிக்கும் செயல் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.