December 26, 2016 தண்டோரா குழு
நல்லெண்ண அடிப்படையில் 220 இந்திய மீனவர்களைச் சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது பாகிஸ்தான் அரசு.
பாகிஸ்தான் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் என்று கூறி, இந்திய மீனவர்கள் 220 பேரை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்து மாலிர் சிறைசாலையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில் கிறிஸ்துமஸ் தினமான ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) விடுதலை செய்துள்ளது..
அரேபிய கடல் எல்லை சரியாக நிர்ணயிக்க முடியாததால் இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இரு நாடுகளுக்கும் சுகமான உறவு இல்லாததால் மீனவர்கள் தங்கள் தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் இருக்க வேண்டியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஸ் எ முஹம்மத் தீவிரவாத இயக்கம் இந்தியாவின் எல்லை பகுதியான உரியில் தாக்குதல் நடத்தியது என்று புதுதில்லி அதிகாரிகள் நம்புகின்றனர். இது இந்திய பாகிஸ்தான் உறவில் அதிக விரிசல் ஏற்பட காரணமானது.
இது குறித்து கராச்சி மாலர் சிறைச்சாலை அதிகாரி ஹசான் சேதோ செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “நல்லெண்ண அடிப்படியில் 22௦ மீனவர்களை விடுதலை செய்துள்ளோம். இது தவிர, இன்னும் 219 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.