November 21, 2016 தண்டோரா குழு
“பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவியதால் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்” என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உரி விமானப்படை தளத்தின்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி பாகிஸ்தான் மண்ணுக்குள் புகுந்த இந்திய ராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை அழித்தனர்.
“சர்ஜிகல் ஸ்டிரைக்” என்று இந்திய அரசு குறிப்பிட்டிருந்த இந்த தாக்குதலால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது கடந்த 50 நாட்களில் மட்டும் 286 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் அத்துமீறலாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 14 வீரர்களும், இந்திய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் 12 பேரும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதால் இந்தியாவுக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஞாயிற்றுகிழமை (நவம்பர் 20) கூறியுள்ளது.
இது தொடர்பாக, பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் சலீம் பாஜ்வா ஞாயிற்றுக்கிழமை தனது ட”ட்விட்டர்” பக்கத்தில், “ராக்சக்ரி செக்டர் வழியாக எல்லைக் கோட்டைக் கடந்து அகாய் அருகே பாகிஸ்தானுக்குள் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊடுருவிய இந்தியாவுக்குச் சொந்தமான ஆளில்லா உளவு விமானம் ஞாயிற்றுகிழமை மாலை 4.45 மணியளவில் பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.