September 15, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தானில் இன்று நடந்த ரயில் விபத்தில் 6 பேர் பலியானார்கள் மேலும் 150க்கு மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முல்தான் பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 6 பேர் பலியாகினர் 150க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பயணிகள் ரயிலான அவாம் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு பொருட்கள் கொண்டு வந்த ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரி சைய்மா பஷீர் கூறும்போது, பயணிகள் ரயில் ஓட்டுனரின் கவன குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் ஓட்டுனர் சிவப்பு சிக்னலை சரியாக கவனிக்காததே இதற்கு காரணம் என்று கூறினார்.
எனினும் விபத்து ஏற்பட்டதற்கான அதிகாரபூர்வ தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடப்பட்ட மூன்று நாட்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் திரும்புகையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.