January 6, 2018 தண்டோரா குழு
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் விமானப்படை தளபதி அஸ்கார் கான் நேற்று(ஜன 5) மாரடைப்பால் காலமானார்.
பாகிஸ்தான் விமானப்படையின் முதல் தளபதியாக பதவி வகித்த ‘ஏர் மார்ஷல்’ அஸ்கர் கான், தனது 96-வது வயதில் உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
அஸ்கார் கான் தனது 35-வது வயதில் பாகிஸ்தான் விமானப்படையின் முதல் தளபதியாக பதவியேற்றார்.பின்னர், பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சர்வதேச விமானச் சேவை நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த 1970ல், மதச்சார்பற்ற அரசியல் கட்சியான தெஹ்ரிக்-இ-இஸ்தக்லால் கட்சியை நிறுவினார்.இவரால் பாகிஸ்தான் நாட்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையாக தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் செல்வாக்கை பெற இயலவில்லை.பின்னர் 2012ம் ஆண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தொடங்கிய தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியுடன் இணைத்தார்.
அஸ்கார் கான் மறைவுக்கு பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன், பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி மற்றும் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பஜ்வா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.