September 19, 2016 தண்டோரா குழு
இந்தியப் பகுதியையும் ,தீவுப் பகுதியான ராமேஸ்வரத்தையும் இணைப்பது பாம்பன் பாலம்.இது 2.1.கிலோ மீட்டர் நீளமுள்ளது.1914ம் ஆண்டு இந்த ரயில்வே பாலம் 146 எஃகு உத்திரங்களாலும்,தாங்கு கட்டைகளாலும் கட்டப்பட்டது.
இவைகள் நீரில் இருப்பதால் நீர் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.கப்பல்கள் வரும்போது அவைகளுக்கு வழிவிடும் வண்ணம் இப்பாலம் நடுவில் மேல்நோக்கித் திறக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் இது வரை கைமுறையாகவே இயக்கப்பட்டு வருகிறது.ஒருமுறை திறந்து மூடுவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும்.
இவற்றை இயந்திரங்கள் மூலம் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இயந்திரத்தை உபயோகித்தால் இப்பணியை 5 நிமிடங்களில் முடித்துவிடலாம் என்று மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். கப்பல் ஒரு முறை இந்த பாலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 3 மணிநேரம் ஆகும்.
சுழற்சி முறையில் 15-20 வருடங்களுக்கு ஒரு முறை உத்திரங்களும்,கட்டைகளும் புதுப்பிக்கப்படும்.16 உத்திரங்களை மாற்றும் பணி நடந்துகொண்டிருப்பதாகவும்,இன்னும் 27 உத்திரங்களை அடுத்த ஆண்டிற்குள் மாற்ற இருப்பதாகவும் அதிகாரி கூறியுள்ளார்.அதன் மூலம் அனைத்தும்
புதுப்பிக்கப்பட்டு விடுவதால் இன்னும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் தேவைப்படாது என்றும் தெரிவித்தார்.
அமைதியான கடலை இப்பாலம் மூலம் ரயிலில் கடப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.ஆனால் ராமேஸ்வரத்திற்கு ஒரு சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனுஷ்கோடியையும், 110 ரயில் பயணிகளையும் 1964ம் ஆண்டு கடல் மூழ்கடித்ததை நினைவு கூர்ந்தால் சிறிது அச்சமும் மேலோங்கும் என்பது சிலரின் கருத்து.
இந்த ரயில் பயணமும், இங்குள்ள ஆலயங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வல்லது. அதுமட்டுமன்றி பாழடைந்த தனுஷ்கோடியையும் சுற்றுலாப் பயணிகள் காணத் தவறுவதில்லை.