August 9, 2016 தண்டோரா குழு
தமிழ் திரையுலகில் ஒரு சிலரை மட்டும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாத அளவு ஒரு முத்திரையைப் பதித்துள்ளனர். அவர்களில் சிலர் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்தினம் போன்ற இயக்குனர்களும், ஏ.வி.எம், சத்யா மூவீஸ், போன்ற தயாரிப்பு நிறுவனங்களும், வாகினி, ஜெமினி, மார்டன் தியேட்டர்ஸ் போன்ற ஷூட்டிங் இடங்களும் தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதவை.
அவர்களில் மேலும் ஒரு நபர் உண்டு என்றால் அவர் பஞ்சு அருணாசலம் அவர்கள். இவர் பன்முகத் திறமையைக் கொண்டவர். இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக மற்றும் கதாசிரியராக பல அவதாரங்களை எடுத்துள்ளார். இவர் தயாரித்த படங்களில் நடித்துப் பெயர் வாங்கிய பலரில் குறிப்பிடத்தக்கவர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் அடங்குவர்.
இளையராஜாவின் 71வது பிறந்தநாளில் பேசிய இவர், நான் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை எழுதியுள்ளேன். இயக்கியுள்ளேன் என்பதோ, நான் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதோ, நான் ஒரு நல்ல வசனகர்த்தா என்பதோ, அல்லது நீண்ட காலம் சினிமாவில் இருந்ததோ எனது பெருமையாக நான் சொல்லமாட்டேன். நான்தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை எனத் தெரிவித்தார்.
இவர் காரைக்குடியில் உள்ள சிறு கூடல் பட்டியில் 1941ம் ஆண்டு பிறந்தவர். இவருக்குப் பஞ்சு சுப்பு என்ற மகன் உள்ளார். அவரும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
பஞ்சு அருணாசலம் இன்று தன்னுடைய 75வது வயதில் உடல்நலமின்றி உயிரிழந்தார். இவரது உடலுக்கு பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.