October 12, 2017 தண்டோரா குழு
முதலமைச்சருக்கும், எனக்கும் மன வருத்தம் ஏற்படவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக பிரதமர் உடன் சந்திப்பு நடைபெற்றது. கடந்த 2 முறை பிரதமரை ஓ.பி.எஸ் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும்படி கேட்டார், ஆனால் பிரதமர் மோடி நேரம் ஒதுக்காததால் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் அவர் தமக்கு நேரம் ஒதுக்கும்படி பிரதமிடம் கேட்டுக் கொண்ட பிறகு, அவரை சந்திப்பதற்காக மோடி நேரம் ஒதுக்கினார்.
இதையடுத்து, நேற்று டெல்லி சென்ற அவர் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்ததித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது ஓ.பி.எஸ் உடன் அவரது ஆதரவாளரான மைத்ரேயனும் இருந்தார்.
சரியாக 40 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த சந்ததிப்புக்கு பின் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியுடன் அரசியல் குறித்து பேசவில்லை.தேவையான நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கங்களை நிறைவேற்றவே நானும், எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்தோம். முதலமைச்சருக்கும், எனக்கும் எந்த மன வருத்தம் ஏற்படவில்லை.அமைச்சர் தங்கமணி பிரதமர் சந்திப்பின் போது உடன் வராததில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறினார். மேலும், மத்திய மருத்துவ குழு விரைவில் தமிழகம் வரும் என பிரதமர் உறுதியளித்ததாகவும் ஓபிஎஸ் கூறினார்.