September 16, 2016 தண்டோரா குழு
பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்தாலும் வீட்டுப்பாடச் சுமையால் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடிவதில்லை என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டு.இதை நிவிர்த்திக்கும் வண்ணம் சண்டிகார் அரசு புதிய பாட முறைகளை அமுல்படுத்த முற்பட்டுள்ளது.
குழந்தைகளின் வீட்டுப் பாடச் சுமையை பெற்றோர் மீது திணிக்காமல் பாடப்படிப்பு பள்ளியுடன் முடியும் வகையில் நடைமுறைக்கேற்ப சில திட்டங்களை அரசு பரிசீலிக்கவுள்ளது.
புதிய திட்டத்தின்படி பள்ளி வேலை நேரத்தை 2 மணி நேரம் அதிகமாக்க முடிவு செய்துள்ளது.அதாவது மாலை 2 மணிக்கு பதிலாக 4 மணிவரை பள்ளி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.அந்த 2 மணிநேரத்தை வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு உபயோகிக்கப்படுத்தலாம்.
அதன் மூலம் வீட்டிற்குச் சென்றபின் பாடப் புத்தகத்தில் மூழ்கவேண்டிய அவசியம் இராது.இதனால் குழந்தைகளுக்கு பெற்றோருடன் அதிக நேரம் செலவழிக்க முடியும் என்பது அரசின் திட்டம் என்று பஞ்சாப் கவர்னர் VP சிங்க் பத்நோரே அரசுப் பள்ளி திறப்பு விழாவின்போது தெரிவித்தார்.
இம்முறையை முதலில் சில பள்ளிகளில் மட்டும் அமுல்படுத்துவதென்றும் ,அதன் பலனை அனுசரித்து மற்ற பள்ளிகளில் அறிமுகப்படுத்தலாம் என்று சண்டிகார் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சண்டிகார் நகரம் கம்பீரமான கட்டிடக்கலைக்குப் பெயர் போனது.ஆகையால் பெரும்பாலான மக்கள் தங்கள் ஓய்வுக் காலத்தை இவ்விடம் கழிக்க விரும்புவது சகஜம்.பலதரப்பட்ட பணிகளிலிருந்து அங்ஙனம் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைத் தொடர்பு கொண்டு ஊக்குவிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்விழாவில் MP கிர்ரொன் கீர்,நிதி மற்றும் கல்விச் செயலர் சர்வ்ஜிட்சிங்க்,கவர்னரின் தலைமைச் செயலரான MP சிங்க், மற்றும் பல முக்கிய உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாடமெடுக்க வகுப்பறைக்கு ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்ற மாணவர்களின் புகாருக்கு, பதிலளிக்கையில்,அத்தகைய ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிர்ரொன் கீர் கூறியுள்ளார்.அவர்களை இடை நீக்கம் செய்வதைவிடக் கடுமையான தண்டனை அளிக்க கல்வித் துறையை வற்புறுத்தப்போவதாகத் தெரிவித்தார்.மேலும் ஆசிரியர்கள் முழுமனதுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முற்படுகின்றார்களோ அன்றே மாணவர்களின் பொன்நாள் என்றும் கூறினார்.