August 13, 2016 தண்டோரா குழு
குழந்தைகளுக்குச் சைவ உணவு மட்டும் அளித்தால் பெற்றோருக்கு சிறைவாசம் என இத்தாலி அரசு சட்டம் இயற்றப் பரிசீலித்து வருகிறது.
சைவ உணவில் குழந்தைகளுக்குத் தேவையான முழு ஊட்டச்சத்து இல்லையாதலால் அவர்கள் வளர்ச்சி பாதிக்கப்படும், அதனால் அசைவ உணவை அளிக்க முற்படாத பெற்றோர்களுக்கு ஓராண்டு முதல் நான்கு ஆண்டுகள் சிறைவாசம் அளிக்கச் சட்டம் இயற்ற கொன்செர்வடிவெ ஃபொர்ஸா இடலியா கட்சி சட்டமன்ற உறுப்பினர் எல்விரா சவினொ வலியுறுத்தியுள்ளார்.
வயதில் முதியவர்கள் சைவ உணவு உண்பதைப் பற்றி தனக்கு எந்த அபிப்பிராய பேதமும் இல்லை எனவும், பெரியவர்கள் தங்கள் விருப்பங்களை தங்கள் குழந்தைகளிடம் திணிப்பதைத் தான் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். மதத்தின் பெயரால், மற்றும் விஞ்ஞான அறிவின்மை காரணமாகவும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பலவீனப்படுத்துகின்றனர் என்றும் கருத்துத் தெரிவித்தார்.
பல குழந்தை நல மருத்துவர்கள் கருத்துப்படி சைவ உணவைவிட அசைவ உணவே முழுச் சத்து நிறைந்தது. சைவ உணவு உண்போர் மாமிசம், மீன், கோழி, வாத்து மேலும் முட்டை போன்ற விலங்கு சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும் உண்ணமாட்டார்கள். இவை உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தர இயலாதவை.
குழந்தைகள் ஆரோக்கிய மற்றவர்களாகவும், சில சமயம் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலைக்கும் தள்ளப்படுவதற்கும் இத்தகைய உணவே காரணம் என்றும், ஆகையால் அசைவ உணவே ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பதனால் அசைவ உணவை மறுப்போர்க்குச் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதும் இவரது வாதம்.
மிலன் என்னும் இடத்தில், ஒரு வயது முதிர்ந்த குழந்தையின் எடை 3மாதக்குழந்தையின் எடையை ஒத்ததாக இருந்தது சைவ உணவின் காரணமாகவே என்று சவினொ உறுதிபடத் தெரிவித்துள்ளார். பல குழந்தைகளின் நிலையை ஆராய்ந்த பின்னரே தான் இந்தச் சட்டத்தை மொழிந்ததாகக் கூறினார்.
விவாகரத்து பெற்ற பெண்மணி ஒருவர் தனது 12 வயதுக் குழந்தையை சைவ உணவு அளித்து வளர்த்தமையால், சிறுவனது உடல் வளர்ச்சி குன்றியுள்ளது என்று அவனது தந்தை நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.அதாவது எந்த ஒரு குழந்தையும் சத்துக் குறைபாட்டால் மருத்துமனையை அணுகும் நிலை ஏற்படாமல், அனைவரையும் பாதுகாக்க வேண்டியது குழந்தை நல மருத்துவர்களின் கடமையாகும்.
எந்த பெற்றோர்களுக்கும் அவர்களது நலனுடன் விளையாட அனுமதி இல்லை. 16 வயது வரை குழந்தைகளுக்கு அசைவ உணவு மறுக்கப் படக்கூடாது. அவ்விதம் மீறுவோர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள், 3 வயதுக்குட்பட்டவர்களுக்கு அசைவம் மறுக்கப்படுமேயானால் தண்டனை அதிகமாக்கப்படும் என்றும் விளக்கியுள்ளார்.இச்சட்டம் சட்டசபையில் விவாதிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.