October 31, 2016 தண்டோரா குழு
கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகளிடமிருந்து வந்த புகாரை அடுத்து, 527 ஆம்னி பேருந்துகளின் மீது மொத்தம் ரூ. 8,32,700 அபராதம் விதிக்கப்பட்டது. கோவையில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற பொதுமக்களின் குற்றசாட்டைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26 முதல் அக்டோபர் 31 வரை கூடுதல் போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, கோவை கூடுதல் போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அக் 26 முதல் அக் 31 வரை 3874 ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் விதிமுறைகளை மீறி செயல்ப்பட்ட 527 பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூபாய் 8,32,700 அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையில் இது வரை ருபாய் 2,78,550 வசூலிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகை செலுத்தாத ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே போல் பண்டிகைக் கால சிறப்பு தனியார் பேருந்துகளை இயக்க வசூலிக்கப்பட்ட வரி ருபாய் 95,160 என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பண்டிகைக் கால விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகள் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்திவிடுகின்றன. இதனை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.