October 8, 2016 தண்டோரா குழு
இந்திய விமானப்படையின் 84-வது தினத்தையொட்டி இன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்திய விமானப்படையினர் மெய்சிலிர்க்கவைக்கும் வகையில் கண்ணைக் கவரும் சாகச நிகழ்ச்சிகளை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர்.
இந்திய பாதுகாப்பு படையின் ஒரு அங்கமாக விளங்கும் இந்திய விமானப் படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே தினம் தான் தொடங்கப்பட்டது. அன்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நாளாக கொண்டாடப்படுகிறது.
முன்னதாக வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை விமானப்படை தளபதி அருப் ராகா ஏற்றுக்கொண்டார். இதன் பின், சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வாயு சேனா, விசிஷ்ட் சேவா உள்ளிட்ட பதக்கங்களை வழங்கி தளபதி அருப் ராகா கவுரவித்தார்.இராணுவ தளபதி தல்பீர் சிங் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உட்பட விமான படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
விமானப்படை தினத்தை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விமானப்படை தினத்தில் விமானப்படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை வணங்குகிறேன். நமது விமான பகுதியை பாதுகாப்பதற்கு நன்றி. உங்களின் துணிவான செயல்பாட்டால் இந்தியா பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.