October 15, 2016 தண்டோரா குழு
தாய் நாட்டிற்குச் சேவை செய்வதே தங்களுடைய முதல் கடமையாகக் கொண்டது இந்திய ராணுவம் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
போபாலில் உள்ள லால் அணிவகுப்பு மைதானத்தில், நேற்று இந்திய ராணுவ வீரர்களுக்கான நினைவிட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர் மோடி. அக்கூட்டத்தில் பேசுகையில், ஒரு ராணுவ வீரர் என்றால் கம்பீரத் தோற்றம், சீருடை, ஆயுதங்கள் தான் மக்களின் மனத்தில் தோன்றும்.
ஆனால் தன் நாட்டு மக்கள் இடர்கள், ஆபத்துகளை எதிர்கொள்ளும்போது, அவர்களுக்கு தங்கள் உதவிக்கரங்களை நீட்டி, அந்த பிரச்னைகளிலிருந்து அவர்களைக் காக்கின்றனர். மேலும் இயற்கைப் பேரழிவுகளின் போது அவர்கள் செய்த சேவைகளையும் உதவிகளையும் நாம் பெருமையுடன் நினைவுகூர்கிறோம்.
கடந்த 2013ம் ஆண்டு உத்தராகண்ட் வெள்ளமாகட்டும், 2014ல் காஷ்மீர் வெள்ளமாகட்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதில் நம் ராணுவத்தின் பங்கு பெருமைக்குரியது.
காஷ்மீரில் ஆயிரக்கணக்கானோரை மீட்டு அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளை வழங்கியுள்ளனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய மக்கள் தங்கள் நன்றியை மறந்து தங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்துபவர்கள் என்ற சிந்தனையில்லாமல் உதவிபுரிந்து சேவையாற்றுபவர்கள் நம் ராணுவத்தினர்.
சில வேளைகளில் இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் அவர்களுடைய இன்னுயிரையும் கூடப் பறிக்கலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதையே தங்களுடைய முக்கியமான கடமையாக கொண்டவர்கள்.
உலக அளவில் ஒப்பிடும்போது இந்திய ராணுவம் வலுவுடையதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதநேயம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நடத்தை, ஒழுக்கம், குடிமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றில் இந்திய ராணுவம் முதன்மையானது.
நம் நாடு மற்றவர்கள் இடத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தும் இல்லை அதற்காக சண்டையிட்டதும் இல்லை. ஏமன் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் உள்நாட்டு போரினால் வாழ்வுக்கு சாவுக்கு இடைய சிக்கிய இருந்த சுமார் 5,600 பேரை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்துக்கொண்டு வர இந்திய ராணுவத்தினர் முக்கிய பங்கு வகித்தனர் என்று பிரதமர் மோடி பாராட்டினார்.
பிரதமரை அடுத்துப் பேசிய மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங்க் சோகன், இதற்கு முந்தைய அரசாங்கங்கள் ஒரு குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நினைவிடங்களை அமைத்தனர்.ஆனால், ஒருபோதும் இராணுவத்தினர் பெயரில் அமைத்ததில்லை என்று கூறினார்.