July 21, 2016 தண்டோரா குழு
சமீப காலமாக தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் அரசியலில் தனிமனித விமர்சனம் மற்றும் ஒரு கட்சியையோ அல்லது அமைப்பையோ கடுமையாக சாடுவது பெருகிவருகிறது. ஆனாலும் அதற்கு எதிர்ப்பு என வரும்போது அரசியல் வித்தியாசம் இன்றி அனைத்துத் தலைவர்களும் ஒன்றாக நிற்பது ஒரு ஆறுதலான விசயமாக உள்ளது.
சமீபமாக உத்தரபிரதேச மாநிலத்தின் பா.ஜ.க துணைத்தலைவர் தயா சங்கர், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குறித்துக் கூறும்போது, அவர் பணத்திற்காக வேட்பாளரை மாற்றுவார். அதிக பணம் கொடுக்கும் நபர்களுக்குக் கட்சியில் சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவித்ததோடு, இது விபச்சாரத்திற்கு இணையானது எனத் தெரிவித்தார்.
இதற்கு நாடு முழுவதும் இருந்து அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சி சார்பாகவும் எதிர்ப்பு வலுத்தது. மேலும் அவர் சார்ந்திருந்த பா.ஜ.கவிலேயே அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மாயாவதி, நான் திருமணம் கூடச் செய்துகொள்ளாமல் தலித் இன மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு வருகிறேன். என்னை இவ்வாறு தரம் தாழ்ந்து பேசியது மன வேதனையை அதிகப்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார். இது குறித்து தமிழகத்தின் முதலமைச்சரும் தயா சங்கருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொளித்ததை அடுத்து பா.ஜ.கவின் மூத்த அமைச்சர் அருண் ஜெட்லி பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் உத்தரபிரதேச துணைத்தலைவர் பதவியில் இருந்து 6 ஆண்டுகளுக்குப் பதவி நீக்கம் செய்து வைக்கப்பட்டார் தயா சங்கர்.
இந்நிலையில் தயா சங்கர் மாயாவதிக்கு விடுத்துள்ள மன்னிப்பு அறிக்கையில், தான் வேண்டுமென்றே தரக்குறைவாக பேசவில்லை எனவும், தடுமாற்றத்தில் வந்து விழுந்த வார்த்தைகளுக்காக தங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் தேர்தல் பிரச்சாரத்தின் பொது பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல்காந்தி, மகாத்மா காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். அது குறித்து அந்த அமைப்பு வழக்கு தொடர்ந்தும் அதற்கு மன்னிப்போ அல்லது விளக்கமோ கொடுக்க ராகுல் மறுத்து வந்ததை அடுத்து நீதிமன்றம் தலையிட்டு ராகுலை கண்டித்தது.
இது போன்ற முடிந்துபோன விசயங்களைத் தோண்டியெடுத்து அதில் மற்ற கட்சி அல்லது அமைப்புகளைச் சம்பந்தப்படுத்தி பேசுவது தவறு என மற்ற கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ள போதும், தான் வலக்கை சந்தித்துக்கொள்வதாக ராகுலின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற ஒரு சில பேச்சுக்களால் தான் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளின் மதிப்பும் மரியாதையும் அதல பாதாளத்தில் விழுகிறது என்பது மட்டும் உண்மை.