February 4, 2017 தண்டோரா குழு
திரைப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் எனப்புடம் இணையதளம் முன்கூட்டியே இணையத்தில் வெளியிடுவதாகக் கூறப்படும் புகாரை அடுத்து, திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ் ராக்கர்ஸ் குழுமத்தினரை கைது செய்ய ஆறு மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதை எதிர்த்து சவால் விடும் வகையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தனது டுவிட்டர் பக்கத்தில்,“ஞானவேல் ராஜா சார், வரும் பிப்ரவரி 9ம் தேதி உங்களது நாளல்ல. எங்களுடையது” என்று தங்களது கருத்தைப் பதிவிட்டிருந்தது. அதாவது, ஞானவேல் ராஜா தயாரித்துள்ள “சிங்கம் 3” (“சி-3”) திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நாள் தங்களுக்கே சாதகமாக அமையும் என்ற கருத்தில் அவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஆனால், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தின் இந்தப் பதிவு டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
ஞானவேல் ராஜா தயாரித்து சூர்யா நடித்துள்ள “சிங்கம்-3” (“சி-3”) திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழின் பல திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளில் காலையிலேயே அந்தப் படங்களை தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் பதிவேற்றி விடுவதாகப் புகார் உள்ளது. இவ்வாறு முழுத் திரைப்படமும் பதிவேற்றப்படுவதால், திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவது குறைந்துபோய்விடுகிறது என்றும் ஏராளமான செலவில் திரைப்படங்களைத் தயாரிப்போர் பெரும் நஷ்டமடைகின்றனர் என்றும் புகார் பரவலாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், “சி-3” படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, தமிழ் ராக்கர்ஸ் இணையத்தினரைக் கடுமையாகச் சாடினார். “அந்த இணையத்தைச் சேர்ந்தவர்களை ஆறு மாதத்தில் பிடித்து நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
பிச்சைக்காரன், சைத்தான் படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எமன்’. விஜய் ஆண்டனியை ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஜீவா சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சனியன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, புதுப்படங்களை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றிவரும் தமிழ் ராக்கர்ஸ் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.
“போகன் படம் சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. ஆனால் ரிலீஸான அன்றே சமூக வலைதளத்தில் அப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அதைக் கிட்டதட்ட இரண்டரை லட்சம் பேர் பார்த்து பகிர்வு செய்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக அதன் தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருப்பார்; எவ்வளவு ரிஸ்க் எடுத்திருப்பார். இதைப் பார்க்கையில், அவரது மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்” என ஆத்திரமடைந்தார்.
மேலும், சமூக வலைதளத்தில் முழுப்படத்தையும் ரிலீஸ் செய்யும் தைரியம் ஒருவருக்கு இருக்கிறது. ‘சி-3’ படம் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணிக்கே “லைவ் ஸ்ட்ரீமிங் (நேரடியாகக் காட்டுவது போல) செய்கிறோம்” என “தமிழ் ராக்கர்ஸ்” இணையம் பதிவு போட்டிருக்கிறார்கள். இதை ஒட்டுமொத்த திரையுலகமும் வேடிக்கை பார்த்துக்கொன்டிருக்கிறது. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
அவர் இவ்வாறு பேசிய உடனடியாக தமிழ் ராக்கர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஞானவேல் ராஜா சார், பிப்ரவரி மாதம் 9-ம் தேதி உங்களுடைய நாள் அல்ல, எங்களுடையது” என்று கூறியது.
ஆனால், அந்த டுவிட்டர் பக்கம் சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டுவிட்டது.