September 14, 2016 தண்டோரா குழு
பிரதமர் நரேந்திர மோடி தனது 66வது பிறந்தநாளை வருகிற 17ம் தேதி குஜராத்தில் கொண்டாட முடிவு செய்துள்ளார்.இதற்காக வரும் 17ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கு செல்லவுள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் காந்தி நகர் சென்று அங்கு அவருடைய தாயார் ஹிர்பாவிடம் ஆசி பெற்று தனது குடும்பத்தினரையும் சந்தித்து பேசவுள்ளார்.பின்னர், பழங்குடியினர் வசிக்கும் தஹோத் மாவட்டத்துக்கு சென்று, அங்கு நீர்ப்பாசன திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிறகு அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று உரைநிகழ்த்தவுள்ளார்.
மேலும், பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு நங்சரி பகுதிக்கு சென்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கிய பின்னர் அங்கு பொதுமக்கள் மத்தியில் மோடி பேசுகிறார் என்று பா.ஜ.கா செய்தித் தொடர்பாளர் பங்கஸ்பாண்டியா தெரவித்துள்ளார்.
குஜராத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டம் மற்றும் பசு இறைச்சி விவகாரத்தால் உனா பகுதியில் தலித் சமூகத்தினர் தாக்கப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றால் குஜராத்தில் பா.ஜ.கா செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.