May 9, 2018
தண்டோரா குழு
அருப்புக்கோட்டை அருகே பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து,நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் மற்றும் ஆளுனர் நியமித்த விசாரணை குழு விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து மதுரையில் சிறையில் இருந்து நிர்மலா தேவி இன்று காலை விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டார்.விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவிக்கு மே 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில்,அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியா நகரில் உள்ள நிர்மலா தேவி வீட்டில் இன்று கொள்ளை முயற்சி நடந்துள்ளது.போலீசார் சீல் வைத்துள்ள அந்த வீட்டில் பின்பக்க வழியாக பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் நிர்மலா தேவியின் வீட்டில் ஆவணங்களை திருட முயற்சியா அல்லது பணம்,நகை கொள்ளை முயற்சியா என விசாரணை நடத்தி வருகின்றனர்.