December 23, 2016 தண்டோரா குழு
பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின் சாலை விபத்துகள் 19 சதவீதம் குறைந்துள்ளன என்று பிகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்தார். சாலை விபத்துகளால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 31 சதவீதம் குறைந்துவிட்டன என்றார் அவர்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின், ஏப்ரல்1 ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரையிலான 7 மாத காலகட்டத்தில், மாநிலத்தில் நடந்த சாலை விபத்துகள் 19 சதவீதம் குறைந்துள்ளன. விபத்துகளால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 31 சதவீதம் குறைந்துள்ளன.
மது ஒழிப்பால் மது குடித்து வந்த மக்கள் மதுவுக்குச் செலவிடும் தொகையை தற்போது பால், இனிப்புகள், உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்குச் செலவிடுகின்றனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, மதுக்கடைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த மதுபானக் கடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தற்போது வழங்கியுள்ள உரிமத்தை 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் புதுப்பிக்கக் கூடாது எனவும் அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபோது என்னை விமர்சித்தவர்களுக்கு இத்தீர்ப்பு சரியான பதிலடி.
மது குடித்து வந்த மக்கள் மதுவுக்குச் செலவிடும் தொகையைத் தற்போது பால், இனிப்புகள், உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்குச் செலவிடுகின்றனர். இதனை உறுதி செய்யும் விதமாக அவற்றின் விற்பனை அதிகரித்துவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.