September 27, 2016 தண்டோரா குழு
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் கோவை மாநகராட்சி 73வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டள்ள துணை மேயர் லீலாவதி உண்ணியை மாற்றக்கோரி அப்பகுதி அதிமுகவினர் கோவை மாவட்ட தலைமை கழக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து 73வது வார்டு அதிமுக பிரதிநிதி ரதிதேவி கூறுகையில் கோவை புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 23வது வார்டு பகுதியை சேர்ந்தவர் லீலாவதி உண்ணி கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 73வது வார்டில் போட்டியிட தலைமை கழகம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து 73வது வார்டு அதிமுக செயலாளர் பரூக் தலைமையில் பிரதிநிதியான நானும் என்னுடன் அந்த வார்டு அதிமுக உறுப்பினர்ளும் லீலாவதி உண்ணியை வெற்றி பெற வைத்தோம். அவருக்கு துணை மேயர் பதவியும் கிடைத்தது. கடந்த 5 ஆண்டுகளாக அவர் அந்த வார்டுக்கு எந்த வேலையும் சிறப்பாக செய்யவில்லை என பொதுமக்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
இப்படி இருக்க தலைமை கழகம் மீண்டும் அவரை அதே வார்டில் போட்டியிட அனுமதித்துள்ளது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கண்டிப்பாக அவர் போட்டியிட்டால் வெற்றி பெறமாட்டார்.இதனால் அந்த வார்டில் திமுகவினர் எளிதில் வெற்றி பெற்றுவிடுவார்கள். எனவே தலைமைகழகம் லீலாவதி உண்ணியை மாற்ற வேண்டும் இல்லையெனில் நாங்கள் தீ குளிக்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.
அதே போல் 49வது வார்டுக்கு திமுக வில் இருந்து வந்த நாகராஜ் என்பவருக்கு சீட்டு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கட்சி உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பு மனு தாக்கல் தொடங்கி அதிமுக தலைமை கழக அறிவித்த வேட்பாளர்கள் எந்த வித மாற்றமுமின்றி இன்று கோவை மாநகராட்சியில் வேட்டு மனு தாக்கல் செய்தது குறிப்பிடதக்கது.