October 12, 2016 தண்டோரா குழு
வியாபாரிகளை மிரட்டி சமூக விரோதிகள் சேர்த்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். இதற்கான தொடக்க விழா அரியாங்குப்பம் என்னும் பகுதியில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசிய அவர் புதுச்சேரியில் கடந்த காலங்களில் சமூக விரோதிகள் சிலர் வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோரை மிரட்டி மாமூல் வசூலித்து வந்தனர். காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் இது தொடர்ந்துக் கொண்டே தான் போனது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் குறிப்பிடதக்க வகையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது என் தலைமையிலான அரசு சமூக விரோதிகளை ஒடுக்குவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. சமூக விரோதிகளின் சொத்து மதிப்பினை சமர்பிக்கும் படி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். இனி வியாபாரிகளை மிரட்டி அவர்கள் பணம் பறிக்கமுடியாது.
சொத்து மதிப்பு குறித்த தகவல் வந்தவுடன் அவர்களது சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். தொழில்துறையினர் நிம்மதியாக தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
கடந்த ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டதால், குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தது. எனது ஆட்சியில் காவல்துறையினருக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறினார்.