October 24, 2017 தண்டோரா குழு
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில், கடந்த 2002-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் மற்றும் பிஸ்கட் வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் தொடங்கப்பட்டது.
இதனிடையே, புதுச்சேரி அரசின் கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது.பின்னர் சில மாதங்கள் கழித்து,தற்போது 12-ம் வகுப்பு வரை காலை நேரத்தில் பால் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.இதனையடுத்து முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டியாக பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் முதல் கட்டமாக இலவச பிஸ்கட் வழங்கப்பட உள்ளது.