November 28, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலசந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது;
வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர்க் காற்று வீசுகிறது. நவம்பர் 30ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்.
தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதையடுத்து தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவத்தில் இதுவரை 10 சதவீதம் அளவுக்குத்தான் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இரண்டு வார கால இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதனால், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
அது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அப்படி வரும் போது நவம்பர் 30 முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்.