August 20, 2016 தண்டோரா குழு
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்து மீறலுக்கு எதிரான, பலுாசிஸ்தான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அங்குள்ள பெண் ஒருவர் மோடிக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள, பலுாசிஸ்தான் பகுதி மக்கள் விடுதலைக் கோரி பலுாச் தேசிய இயக்கத்தின் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது,பலுாசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்,பாகிஸ்தான் தேசம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது.அப்பகுதி மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று கூறினார்.மோடியின் உரைக்கு பலுாசிஸ்தான் மக்கள் அதிக வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பலுாச் மாணவர் சங்க தலைவர் கரீமா என்ற பெண், சமூக வலைத்தளம் மூலமாகப் பிரதமர் மோடிக்கு, ரக்ஷாபந்தன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.அதில் அவர், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு ஆளாகி, காணாமல் போன எத்தனையோ சகோதரர்களை பலுாசிஸ்தான் சகோதரிகள் எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்.
இந்திய பிரதமர் மோடியின் வார்த்தைகள் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.மேலும் அவர் எங்கள் சகோதரர்.பாகிஸ்தானின் அடக்கு முறையை, சர்வதேச அரங்கில் எதிரொலிக்க உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.